மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகை
திருப்பூர் 15 வேலம்பாளையம் சீரணி அரங்கம் முன்பு அனுமதி இல்லாமல் விதிமுறையை மீறி விநாயகர் சிலை வைக்கப்பட்டதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. அப்போது 15 அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை உடனடியாக அகற்றக்கோரியும், இந்து முன்னணி அமைப்பிற்கு துணை போகும் காவல்துறையை கண்டித்தும் தரையில் அமர்ந்து, கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பல்வேறு அமைப்புகள்
இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் நந்தகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்க பொறுப்பாளர் ஆறுமுகம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணி, மக்கள் அதிகாரம் அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், திராவிடர் கழக நகர பொறுப்பாளர் மைனர் மற்றும் அம்பேத்கரின் உணர்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.