எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் வருமான வரி சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில், வருமான வரிச் சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
" சென்னை மற்றும் கரூரில் உள்ள என்னுடைய இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அதைப் பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது. சோதனை முடிந்த பிறகு விளக்கம் அளிக்கிறேன்" என்று கூறினார்.
மேலும் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கூறுகையில் "அவருடைய (செந்தில் பாலாஜி) வீடுகளில் சோதனை நடக்கவில்லை. அது பற்றி அவர் எப்படி பேசுவார். ஆனால், அடுத்தடுத்த சோதனை முடிவுகள் தெரிந்த பின்னர் முழுமையான தகவலுடன் அவர் நிச்சயம் செய்தியாளர்களைச் சந்திப்பார்" என்று கூறினர்.