''எனது மகன் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது''- அற்புதம்மாள் பேச்சு


எனது மகன் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது- அற்புதம்மாள் பேச்சு
x

‘‘எனது மகன் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது’’ என அற்புதம்மாள் பேசினார்.

திருநெல்வேலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள், சமூக அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். எனவே அற்புதம்மாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தற்போது தமிழக முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நெல்லையில் நன்றி அறிவிப்பு கூட்டம், பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது இதில் அற்புதம்மாள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ''எனது மகன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக நடத்திய சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக அரசியல் கட்சியினர் ஆதரவளித்தனர். சாதி, மதம், இனம் கடந்து எனது மகன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோன்று முகாமில் உள்ள 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்'' என்றார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story