மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை - வடமாநில தொழிலாளி கைது
மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் பல்லக்குமாநகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து ஒருவர் வெளியே வந்தார். அவர், செல்வத்தை பார்த்ததும் கையில் வைத்திருந்த 8 மதுபாட்டில், ரூ.2 ஆயிரத்தை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
செல்வத்திடம் டாஸ்மாக் கடையின் ஊழியர்களின் செல்போன் எண் இருந்துள்ளது. உடனே அவர் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்தனர். செல்வத்திடம் விசாரணை நடத்தி அவர் சொன்ன அடையாளங்கள் மூலம் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நபரை தேடினர். இந்த நிலையில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே அந்த நபர் சிக்கினார். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் மண்டல் (வயது 39) என்பதும், வேளச்சேரியில் உள்ள கேபிள் நிறுவனத்தில் கேபிள் வயர் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.