இறச்சகுளத்தில் கடையில் பூட்டை உடைத்து கைவரிசைபணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்த மர்ம ஆசாமிகள்


இறச்சகுளத்தில் கடையில் பூட்டை உடைத்து கைவரிசைபணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்த மர்ம ஆசாமிகள்
x

இறச்சகுளத்தில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் பணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்து விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

அழகியபாண்டிபுயரம்:

இறச்சகுளத்தில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் பணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்து விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலசரக்கு கடை

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது48). இவர் வீட்டின் கீழ்தளத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்த பின்பு கடையை பூட்டி விட்டு மாடியில் உள்ள வீட்டிற்கு தூங்க சென்றார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கடையில் இருந்த முட்டைகள் உடைத்து குடிக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்லெட்டுகள் சாப்பிடப்பட்டிருந்தது.

மர்ம நபர்கள்

இரவில் யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் கடையில் பணம் ஏதாவது இருக்கிறதா? என தேடினர். ஆனால் பணம் கிடைக்காததால் சாவகாசமாக அமர்ந்து முட்டைகளை உடைத்து குடித்து சாக்லெட்டுகளை சாப்பிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கடையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

தொடரும் சம்பவங்கள்

இறச்சகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவிலில் தூய்மை செய்ய சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு வீட்டில் புகுந்த நபர்கள் நகை, சொத்து பத்திரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் பலசரக்கு கடையில் மீண்டும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story