கடலூரில், ஊர்க்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு: பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை


கடலூரில், ஊர்க்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு: பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் ஊர்க்காவல் படையினர் பணியாற்ற வேண்டும் என்று ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

கடலூர்

பயிற்சி நிறைவு விழா

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்ற திருநங்கை உள்பட 33 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் திருநங்கை உள்பட 23 பேருக்கு ஊர்க்காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணியாற்ற பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 45 நாட்கள் அவர்களுக்கு அடிப்படை கவாத்து, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு விழுப்புரம் கோட்ட ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி கேதார்நாதன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட திருநங்கை உள்பட 3 பேருக்கு பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.

பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேசுகையில், ஊர்க்காவல் படையில் சிறப்பாக பயிற்சி முடித்த நீங்கள், போலீஸ் சீருடை அணிவது பெருமையான விஷயம். அதற்குரிய மரியாதையுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நம்மால் நாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கு எந்த ஒரு அவப்பெயரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். யார் மனதையும் புண்படும்படி பேசக்கூடாது. பேரிடர் காலத்தில் உங்களுடைய பணி சிறப்பானதாக அமைய வேண்டும். பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கடலோர காவல் குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம், ஊர்க்காவல்படை உதவி ஆய்வாளர் மோகன், ஊர்க்காவல் படை எழுத்தர் அனீஸ்தீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story