நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் அமைப்புகள் முற்றுகை போராட்டம்


நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் அமைப்புகள் முற்றுகை போராட்டம்
x

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாடார் அமைப்புகளை சேர்ந்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்தும், அவரை தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு நாடார் சங்கம் உள்பட நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் நேற்று ஆலந்தூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை பா.ம.க. பொருளாளர் திலகபாமா தொடங்கிவைத்தார்.

250 பேர் கைது

இதற்காக நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலந்தூரில் இருந்து நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். ஆலந்தூர் கோர்ட்டு அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் அனைவரும் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்திய முத்துரமேஷ் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் வாகனங்களில் அழைத்துச்சென்று ஆலந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

கலந்து கொண்டோர்

போராட்டத்தில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் போரூர் ஆனந்தராஜ், தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், தட்சணமற நாடார் சங்கம் சென்னை கிளை சேர்மன் வி.செல்வராஜ், நாடார் மக்கள் பேரவை தலைவர் ஏ.பி.ராஜா, தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் கு.சிவராஜி ராஜன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் எஸ்.வி.பூமிநாதன், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார்.

அகில இந்திய நாடார் சங்க பேரமைப்பு தலைவர் கே.மணிராஜ், கோயம்பேடு, மதுரவாயல் நாடார் சங்க பொதுச்செயலாளர் ரஸ்னா என்.ராமசந்திரன், சென்னை மண்டல காமராஜர், ஆதித்தனார் கழக தலைவர் இ.வே.ரா.பால் பாண்டியன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் தி.உதயகுமார், மேடவாக்கம் நாடார் சங்க பொதுச்செயலாளர் யு.எஸ்.பி.முருகானந்தம், சேலையூர் நாடார் சங்க தலைவர் காந்தி எஸ்.சேகர், மாடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் எஸ்.அந்தோணி, கோயம்பேடு நாடார் சங்க தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன்.

கீழ்கட்டளை நாடார் சங்க தலைவர் ஏ.வி.பி. பாலமுருகன், பாண்டிய நாடு நாடார் பேரவை தலைவர் பொன்.கருக்குவேல்ராஜன், கலாம், காமராஜர் கக்கன் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆர்.வேல்முருகன், தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் ஆணைகுடி செ.வீரகுமார், ஆடிட்டர் க.சிவராஜ், மார்க்கெட் எல்.கே.என்.ராஜா, வீரமாணிக்கம் சிவா, சி.பா.பாஸ்கர், வ.சி.பொன்ராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் ஏ.டி.கார்த்திகேயன், நாடார் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் கோயம்பேடு கே.சுரேஷ், ஆலந்தூர் ஸ்ரீதர், மார்க்கெட் பி.ஞானபால், ஆலந்தூர் பத்மநாபன் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க-பா.ஜ.க. ஆதரவு

கைது செய்யப்பட்டவர்களை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ஆதிராஜாராம், பா.ஜ.க. சார்பில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜன், மாநில பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி பிரிவு செயலாளர் பிரதாப் சந்தர், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

இதுபற்றி முத்துரமேஷ் கூறும்போது, "ஆர்.எஸ்.பாரதி மீது தி.மு.க. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றை படிக்காமல் கொச்சைப்படுத்துவதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும்" என்றார்.


Next Story