நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குறைந்ததால், நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலூர்
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குறைந்ததால், நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிபா வைரஸ்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
கேரள எல்லையில் நீலகிரி உள்ளதால், முன் எச்சரிக்ககை நடவடிக்கையாக அங்கிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தி தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே தமிழக சுகாதாரத்துறையினர் அனுமதித்தனர்.
மூடல்
மேலும் கூடலூர் அருகே நாடுகாணியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் மையம் மூடப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதை கருத்தில் கொண்டு அங்கு அமல்படுத்திய கட்டுப்பாடுகளை கேரள சுகாதாரத்துறை தளர்த்தி உள்ளது.
திறப்பு
இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள நாடுகாணி தாவரவியல் மையத்தை கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் நேற்று வனத்துறையினர் திறந்தனர். தொடர்ந்து, அங்கு இயற்கை காட்சிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்னர். சுமார் 10 நாட்களுக்கு பிறகு தாவரவியல் மையத்தை திறந்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






