நாகை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்
நாகை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் நாகை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
நாகை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துதல் மற்றும் இணையதளம் மூலம் பதிவு செய்வது குறித்து அரசு அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 1. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் வருகிற 27.1.2023 மற்றும் 28.1.2023 ஆகிய தேதிகளில் நடக்கிறது. கால்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 28.1.2023 அன்றும், வளைகோல்பந்து மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் 29.1.2023 அன்றும் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அதேபோல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 7.2.2023 மற்றும் 8.2.2023 ஆகிய தேதிகளிலும், கால்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 8.2.2023 அன்றும், வளைகோல்பந்து மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் 9.2.2023 அன்றும் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அதேபோல பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 15.2.2023 அன்று மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது.
அரசு ஊழியர்களுக்கான போட்டிகள்
அதேபோல மாற்றுத்திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம் உள்ளிட்ட கபடி போட்டிகள் 31.1.2023 அன்று நடக்கிறது. அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 10.2.2023 நடக்கிறது.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.