மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு நாகை விவசாயிகள் வரவேற்பு


மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு   நாகை விவசாயிகள் வரவேற்பு
x

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு நாகை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.அதன்படி ஜூன் 12-ந்தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும், தாமதமாக திறந்ததால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து, சம்பா பரப்பளவு அதிகாரிக்கும்.

முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முன்னதாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் ஜூன் 12-ந்தேதி முன்பாக மே மாதத்திலேயே வருகிற 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மேட்டூ்ர் அணை திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து நாகை மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:-

வரவேற்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர்:-ஜூன் மாதத்திற்கு முன்பாகவே தண்ணீர் திறந்து விடப்படும் என உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு,க,ஸ்டாலினுக்கு நாகை விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரும் பணியை மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும். அப்போது தான் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், முழுமையாக கடைமடை பகுதிக்கு சென்றடையும்.முன்னதாகவே மேட்டூர் அணை திறப்பதால் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். மானிய விலையில் விதைகளை வழங்க வேண்டும்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன்:- மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த எதிர்பாராத அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நாகை கடைமடை விவசாயிகள் அதிக அளவில் வெண்ணாறு வடிநில கோட்டம் வெட்டாறு பாசனத்தை நம்பியே உள்ளனர். ஆனால் நாகையில் இருந்து தஞ்சை வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் இருவழி பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பெரும்பாலான வாய்க்கால்கள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. எனவே பாசனத்திற்கு திறந்து விடும் தண்ணீர் எப்படி கடைமடைக்கு வந்து சேரும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. வாய்க்கால்களில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியினை முதல் கட்டமாக விரைந்து முடிக்க வேண்டும்.

மழையில் பயிர்கள் பாதிக்காது

தென்பிடாகை சுரேஷ்:-டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே 24-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முன்னதாக தண்ணீர் திறப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் முன்கூட்டியே சாகுபடி பணிகளை தொடங்க முடியும். இதனால் குறுவை பயிர்கள் மழையினால் பாதிக்கப்படாமல் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும்.திட்டச்சேரி பாண்டியன்:- முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி கொண்டு முன்கூட்டியே விவசாய பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு அறுவடை பணியை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும். மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


Next Story