நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி


மாசிமகம், பவுர்ணமியையொட்டி நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

நாகப்பட்டினம்


மாசிமகம், பவுர்ணமியையொட்டி நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

தீர்த்தவாரி உற்சவம்

நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்-பெருமாள் கோவில்களில் இருந்து சாமிகள் வாகனங்களில் புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டு மாசி மகம் மற்றும் பவுர்ணமியையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நேற்று நாகை புதிய கடற்கரையில் நடந்தது.

முன்னதாக நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், நாகை சட்டையப்பர் கோவில், மெய்க்கண்ட மூர்த்தி கோவில், நடுவதீஸ்வரர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோவில், அந்தனப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோவில், அண்ணாமலை நாதசுவாமி கோவில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சாமிகள் நாகை அவுரிதிடலுக்கு கொண்டு வரப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் அங்கிருந்து சாமிகள் நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைதொடர்ந்து கடற்கரையில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர். இதையொட்டி நாகை நம்பியார்நகர், ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சாமிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

தர்ப்பணம்

அதேபோல் வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் இருந்துசாமி புறப்பாடாகி கல்லாறு கடற்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. இதில் செயல் அலுவலர்கள் சண்முகநாதன், தினேஷ்குமார், ஜெயராமன் உள்பட கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நாகை புதிய கடற்கரையில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திரளானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


Next Story