நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளையுடன்(வெள்ளிக்கிழமை) நிறுத்தப்படுகிறது. மீண்டும் ஜனவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக நாகை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளையுடன்(வெள்ளிக்கிழமை) நிறுத்தப்படுகிறது. மீண்டும் ஜனவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக நாகை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் கப்பல்
நாகை துறைமுகத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டது.
முதல் நாள் 50 பேருடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சென்றது. அன்றைய தினம் மாலை காங்கேசந்துறையில் இருந்து 30 பயணிகளுடன் கப்பல் நாகை துறைமுகத்துக்கு வந்தது.
பயணிகள் எண்ணிக்ைக குறைவு
2-வது முறையாக கடந்த 16-ந் தேதி 20 பயணிகளுடன் நாகையில் இருந்து இலங்கைக்கு சென்ற கப்பல் மீண்டும் அங்கிருந்து 20 பயணிகளுடன் நாகை துறைமுகத்தை வந்தடைந்தது. முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.
அதுவும் வருகிற 24-ந்தேதி வரை மட்டுமே பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்படும். அதன் பின்னர் இயற்கை சீற்றம் மற்றும் துறைமுகம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கப்பல் சேவை நிறுத்தப்படும். பின்னர் ஜனவரி மாதம் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே நிறுத்தம்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற 23-ந் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு முன்கூட்டியே நாளையுடன்(வெள்ளிக்கிழமை) நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
நாளை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்லும் கப்பல் அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும்
அங்கு கப்பலில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் ஜனவரி மாதம் முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று நாகை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகையில் இருந்து நேற்று 32 பயணிகள் இலங்கைக்கும், இலங்கையில் இருந்து 47 பயணிகள் நாகைக்கும் கப்பலில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.