நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் உப கோவிலான நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மன் கோவில் கிழக்கு ரதவீதி பகுதியில் விவேகானந்த பாஸ்கரனம் அருகில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ரூ.8 லட்சம் நிதியில் கோவில் திருப்பணிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாகவே நடைபெற்று வந்தது. தற்போது திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
விழாவானது கடந்த 24-ந் தேதி கணபதி ஹோமம், முதல் காலயாகபூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு 2-வது கால யாக பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 10.40 மணிக்கு கோவிலின் விமான கலசத்தில் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன், தக்கார் நாகேந்திர சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ஆய்வர் பிரபாகரன், பேஷ்கார்கள் கமலநாதன், முனியசாமி, ராமநாதன், சிருங்கேரி மட மேலாளர் மணிகெண்டி நாராயணன், சங்கரமடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சங்கர மடத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜை கோவிலின் உதயகுமார் குருக்கள் தலைமையில் செய்யப்பட்டது.