10 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரி


10 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரி
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்கால்கள் தூர்ந்து போனதால் 10 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான ஏரிகள் நிரம்பின. ஆனால் சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நல்லாண் பிள்ளைபெற்றாள் ஏரி இதுவரை வறண்டே காணப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியுமா? என்ற அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

பாக்கம்பாடி அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆட்டுப்பண்ணை வழியாக தோட்டப்பாடி ஏரியை வந்தடையும், பின்னர் இங்கிருந்து நீர் வரத்து வாய்க்கால் வழியாக நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரிக்கு வரும். ஆனால் தற்போது ஆட்டுப்பண்ணை அருகில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் மண் மேடு மற்றும் பாறை தடுப்புகள் உள்ளதால் அங்கிருந்து குறைந்த அளவு தண்ணீர் தோட்டப்பாடி ஏரிக்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரிக்கு இடையில் உள்ள நீர் வரத்து வாய்க்காலின் கரை உடைந்து இருப்பதால் தோட்டப்பாடி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஏரிக்கு வராமல் ஆற்றில் கலக்கிறது.

எனவே பாக்கம்பாடி அணைக்கட்டில் இருந்து நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரிக்கு இடையில் தூர்ந்து கிடக்கும் நீர் வரத்து வாய்க்கால்களை தூர் வாருவதோடு, வாய்க்காலின் குறுக்கே உள்ள தடுப்புகளையும் அப்புறப்படுத்தி ஏரியில் தண்ணீரை நிரப்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நெடுமாறன் கூறும்போது:-

நயினார்பாளையம் கிராமத்தில் உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரி 121 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் பொதுப்பணி துறையின் அலட்சியத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் சரியாக தூர் வாரப்படாததால் தண்ணீர் வரத்து இன்றி ஏரி வறண்டே கிடக்கிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். நயினார்பாளையம் கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரி தற்போது ஏரிக்கான முகாந்திரமே இல்லாமல் புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து தரிசு நிலம் போல காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி ஏரியில் தண்ணீர் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறும்போது:-

சேலம் மாவட்டத்தில் இருந்து தோன்றி வரும் வதிர்ஷ்ட நதியிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் பாக்கம்பாடி அணைக்கட்டு, காளசமுத்திரம் ஏரி, தோட்டப்பாடி ஏரி வழியாக நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரிக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். ஆனால் தோட்டப்பாடி ஏரிக்கு கீழ்ப்பகுதியில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்களை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து சேதப்படுத்திவிட்டனர். இதனால் தோட்டப்பாடி ஏரி முழுமையாக நிரம்பினாலும், அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நல்லாண் பிள்ளை பெற்றாள் ஏரிக்கு வராமல் ஆற்றில் கலக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. சில கிராமங்களில் தண்ணீரை பிடித்து வைக்க இடம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இங்கு ஏரி இருந்தும் தண்ணீர் பிடித்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாதது வேதனையாக உள்ளது. இனிமேலாவது அதற்கான முயற்சியை அதிகாரிகள் மேற்கொண்டு ஏரியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story