நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை காலதாமதம் இன்றி முடிக்க வேண்டும் கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை காலதாமதம் இன்றி முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான.மகேஸ்வரன் தலைமை தாங்கி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது :-
தமிழக முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம், மக்களை தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா ? என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காலை உணவு திட்டம் ஆய்வு
முன்னதாக நாமக்கல் நகராட்சி கோட்டை தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் உணவு வகைகள், உணவின் தரம், சுவை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர்கள்.மஞ்சுளா, கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சுகாதார பணிகள் (துணை இயக்குனர்) பிரபாகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்).கலையரசு உள்பட நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.