பயிர்கள் சேதமடைந்ததை இயற்கை பேரிடராக கருதி விவசாய கடன்களை வட்டியில்லா கடனாக மாற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பயிர்கள் சேதமடைந்ததை இயற்கை பேரிடராக கருதி விவசாய கடன்களை வட்டியில்லா கடனாக மாற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் பயிர்கள் சேதம் அடைந்ததை இயற்கை பேரிடராக கருதி விவசாய கடன்களை வட்டியில்லா கடனாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நாமகிரிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்திருப்பதால் விவசாய பணிகள் தடைபட்டுள்ளது.
பயிர் கடன்கள்
எனவே இதனை இயற்கை பேரிடராக கருதி விவசாய கடன்கள் அனைத்தையும் வட்டியில்லா நீண்ட காலகடனாக மாற்றி கொடுக்க வேண்டும். அதோடு புதிதாக பயிர் செய்யும் வகையில் நிபந்தனை இன்றி புதிய பயிர் கடன்களை வழங்க வேண்டும். ராசிபுரம் உழவர் சந்தை முன்பு சிலர் காய்கறி கடை அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதேபோல் பல்வேறு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பல்வேறு கேள்விகள்
இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், திருச்செங்கோடு நகராட்சியின் கழிவுநீர் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, திருச்செங்கோட்டில் சுற்றுவட்ட பாதைக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கான தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காததது. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக அதிகாரிகளிடம் எழுப்பினார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலையை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) துரைசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) கணேசன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.