மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு: சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை வீரன் கோவில்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008-ம் ஆண்டு நில அளவீடு செய்யப்பட்டது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரக்கன்றுகள் நடாததால் அப்பகுதி பயன்பாடின்றி இருந்தது. இதற்கிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிப்பட்டி பஸ் நிறுத்தம் இடையே சாலையோரம் மதுரை வீரன் கோவில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த இடத்தில் உள்ள மதுரை வீரன் சாமி கோவில் அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு- மசக்காளிப்பட்டி இடையே உள்ள சாலையில் திரண்டனர்.
பின்னர் சர்வீஸ் சாலை பணிக்காக மதுரை வீரன் சாமி கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன
அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் பஸ் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.