நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை


நாமக்கல் மாவட்டத்தில்  7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எய்ட்ஸ்

நாமக்கல் மாவட்டமானது எய்ட்ஸ் நோய் தாக்குதலில் தமிழக அளவில் பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது. தற்போது மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை எடுத்த முயற்சியால் நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எய்ட்ஸ் நோய் பரவலும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி எச்.ஐ.வி. தொற்றின் நிலை 0.924 சதவீதமாக உள்ளது.

இந்தாண்டு ″சமப்படுத்துதல்" என்பனவற்றை மைய கருத்தாக கொண்டு அனைத்து நிலையிலும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

25 ஆலோசனை மையம்

நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 25 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் மூலம் இலவச எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 9 ஆயிரத்து 295 கர்ப்பிணிகள் எச்.ஐ.வி பரிசோதனை செய்து உள்ளனர். மேலும் 54 ஆயிரத்து 348 பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ததில் 189 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கூட்டுமருந்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

கூட்டுமருந்து சிகிச்சை

நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி, திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்பட்டு வரும் 3 ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்களில் 7,245 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 10 ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்ைச அளிக்கப்படுகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

6,300 தன்னார்வ உறுப்பினர்கள்

எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு குறித்த செய்திகள் இளைய தலைமுறையினர் மத்தியில் சென்றடைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் 53 செஞ்சுருள் சங்கங்கள் தொடங்கப்பட்டு சுமார் 6,300 மாணவ, மாணவிகள் இதில் தன்னார்வ உறுப்பினராக இணைந்துள்ளனர்.

மருத்துவத்தின் மகத்துவத்தால் எய்ட்ஸ் கண்டறியப்பட்ட நபர்கள் 20 ஆண்டுகளையும் தாண்டி சக மனிதர்களை போன்று வாழ்ந்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story