நாமக்கல்லில் வரி செலுத்தாமல் உள்ள காலிமனைகளை நகராட்சி எடுத்து கொள்ளும் ஆணையாளர் எச்சரிக்கை


நாமக்கல்லில் வரி செலுத்தாமல் உள்ள  காலிமனைகளை நகராட்சி எடுத்து கொள்ளும்  ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் உள்ள காலிமனைகளை நகராட்சி தன்வசம் எடுத்து கொள்ளும் என ஆணையாளர் சுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.11½ கோடி நிலுவை

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ஆண்டிற்கு வரவேண்டிய மொத்த வருவாய் ரூ.23 கோடியே 97 லட்சம் ஆகும். இந்த ஆண்டில் இதுவரை ரூ.12 கோடியே 37 லட்சம் மட்டுமே வசூல் ஆகியுள்ளது. ரூ.11 கோடியே 59 லட்சம் வரி நிலுவையில் உள்ளது.

நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் நிலுவையில் உள்ளதால் நகரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு மாத ஊதியம், முறையான குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகத்திற்கான மின் கட்டணம் ஆகியவைகளை உரிய காலத்தில் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட 39 வார்டுகளில் காலிமனை வரிவிதிப்பு செய்யப்பட்ட 8,751 வரி விதிப்புகளில் 2022-2023 2-ம் அரையாண்டு வரை ரூ.2 கோடியே 63 லட்சத்து 77 ஆயிரம் வரி நிலுவையாக உள்ளது. பொதுமக்களில் பலர் காலிமனை வரியை உரிய காலத்தில் செலுத்தாமலும், வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமலும் உள்ளனர்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காலிமனைகளுக்கு தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டப்படி கட்டாயமாக வரி செலுத்த வேண்டும். எனவே நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் காலிமனை வரி நிலுவை வைத்துள்ள மனைகளின் உரிமையாளர்கள் உடனடியாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை அணுகி நிலுவை விவரங்களை பெற்று, நிலுவைத் தொகையினை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் 31-ந் தேதிக்கு மேல் காலிமனை வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள காலிமனைகளை, நகராட்சி சட்டவிதிகளின்படி நகராட்சி தன்வசம் எடுத்துக்கொள்ள சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியவர்களுக்கு, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன் நகராட்சி சட்டவிதிகளின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story