வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தொழில் அதிபரின் வீடு, கடைகளுக்கு `சீல்'
நாமக்கல்லில் தொழில் அதிபர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய வீடு, 2 கடைகள் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன.
தொழில் அதிபர்
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் குமார். தொழில் அதிபர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1 கோடியே 75 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.
இந்த கடன் பெறுவதற்காக மனோஜ்குமார் தன்னுடைய வீடு, 2 கடைகளின் பத்திரங்களை அடமானமாக வைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வங்கி சார்பில் கடனை செலுத்தகோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மனோஜ்குமார் கடனை செலுத்தமால் காலம் தாழ்த்தி வந்தார்.
பரபரப்பு
இந்த நிலையில் வங்கி மூலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மனோஜ்குமார் கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய வீட்டை அடமானம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் மூலம் கடன் தொகையை திருப்பி செலுத்த கோர்ட்டு ஆணையுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து நேற்று வருவாய் துறை மற்றும் போலீசாருடன் சென்ற வங்கி அதிகாரிகள் மனோஜ் குமாரின் வீடு, 2 கடைகளை ஜப்தி செய்து பூட்டி `சீல்' வைத்தனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.