இது நம்ம வார்டு-3 குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


இது நம்ம வார்டு-3  குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி 3-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

3-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் என்.ஜி.ஓ. காலனி, மகாத்மா காந்தி நகர், பச்சையம்மன் நகர், மேற்கு காலனி, வடக்கு காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 2 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதர அரசு அலுவலகம் எதுவும் இல்லை.

சின்ன முதலைப்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதியை பிரித்து இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார்டில் 1,267 ஆண்கள், 1,305 பெண்கள் என மொத்தம் 2,572 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட கொ.ம.தே.க.வை சேர்ந்த பழனிசாமி வெற்றி பெற்றார்.

மழைநீர் வடிகால் வசதி

நாமக்கல் நகராட்சியை பொறுத்தவரையில் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இதில் 3-வது வார்டும் அடங்குகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு அரசு அனுமதி அளித்து உள்ள நிலையில் விரைந்து இப்பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வார்டில் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதை தடுக்க மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கடை ஒன்றை வார்டின் மைய பகுதியில் தொடங்க வேண்டும். பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதவிர சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

ரேஷன் கடை அமைக்க வேண்டும்

இதுகுறித்து மகாத்மா காந்தி நகரை சேர்ந்த சித்ரா கூறியதாவது:-

எங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க நாங்கள் அடுத்த வார்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக மேற்கு காலனி பொதுமக்கள் முதலைப்பட்டிக்கும், வடக்கு காலனி பொதுமக்கள் சின்ன முதலைப்பட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே எங்களது வார்டின் மைய பகுதியான மகாத்மா காந்தி நகரில் ரேஷன் கடை ஒன்றை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மழை பெய்தால் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி விடுகிறது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மழைநீர் வடிகால் வசதி வார்டு முழுவதும் ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல் கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும். மேலும் காய்கறிகள் வாங்க தற்போது சின்னமுதலைப்பட்டி சந்தைக்கு சென்று வருகிறோம். எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் சந்தை தொடங்கினால் நன்றாக இருக்கும்.

பழுதடைந்த சாலைகள்

பச்சையம்மன் நகரை சேர்ந்த மாதையன்:-

பச்சையம்மன் நகரில் சாலைகள் மிகவும் பழுதான நிலையில் காணப்படுகின்றன. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும். இதேபோல் வடக்கு காலனிக்கு செல்லும் வழியில் சிறுபாலம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை புதுப்பித்து, தார்சாலை அமைத்து தர வேண்டும்.

இதேபோல் நாமக்கல் நகரில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் உடனடியாக தெருவிளக்கு வசதி இல்லாத பச்சையம்மன் நகர், செல்வா நகர், சண்முகா நகர், கோழி நகர் பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். இதேபோல் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கொசு தொல்லையை கட்டுப்படுத்த அடிக்கடி புகை மருந்து அடிக்க வேண்டும். பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமி கூறியதாவது:-

நான் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த வார்டில் வாரம் ஒருமுறை தான் குடிநீர் வரும். ஆனால் தற்போது அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி நகரில் 60 சதவீதம் தார்சாலை பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. கோழிநகரில் இருந்து பொன்நகர் பஸ்நிறுத்தம் முதல் பெரியசாமி கோவில் வரை மண்சாலை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கு காலனியில் இருந்து சின்ன முதலைப்பட்டி கடைக்கால் வரை தார்சாலையை புதுப்பித்து கொடுத்து உள்ளேன். இதேபோல் காவேரி நகரில் மண்சாலை தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் பாதாள சாக்கடை பணி தொடங்க இருக்கிறது. அப்பணி நிறைவடைந்தால் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும். அதற்கு பிறகு தான் இதர சாலை பணியை மேற்கொள்ள முடியும். இதேபோல் எனது வார்டுக்கு உட்பட்ட காவேரிநகர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். வார்டு முழுவதும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவும், சந்தை கூடுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story