ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பொது இடத்தை வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றக்கோரி தர்ணா


ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய  பொது இடத்தை வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றக்கோரி தர்ணா
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் கிராமம் அம்பேத்கர் நகர் புதுக்காலனியில் கடந்த 1978-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தனியாரிடம் இருந்து 2.36 ஏக்கர் நிலம் வாங்கி 33 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதம் உள்ள இடம் எதிர்கால தேவைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து 1986-ம் ஆண்டு பொது இடத்தில் இருந்து 14 பேருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. முன்பு வழங்கிய 'லே அவுட்டில்' குடியிருப்பு தேவைக்காக கடை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. அதில் மரம், செடி வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதாக கூறி, மரங்களை வெட்ட முயன்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி சென்றனர். இதற்கிடையே எங்களுக்கு ஒதுக்கிய பொது இடத்தை வருவாய்துறை ஆவணங்களில் இருந்து மாற்றி வீடு இல்லாத பொதுமக்களுக்கு மனை பிரித்து வழங்க வேண்டும் என கேட்டு அப்பகுதி மக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story