நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு4-ம் கட்ட இலவச சீருடை வழங்கும் பணி தொடக்கம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 செட் இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் இதுவரை 3 செட் சீருடை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 4-வது செட் சீருடை வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இதுவரை 3 செட் இலவச சீருடை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 4-ம் கட்டமாக நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் வந்து தங்களுக்கு தேவையான சீருடைகளை பெற்று செல்கின்றனர். பின்னர் பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.