நாமக்கல்லில்சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சாலை பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த முதுநிலைப்பட்டியலை, தமிழ்நாடு சார் நிலை பணியமைப்பு விதிகள் அடிப்படையில் முறைப்படுத்தி வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விஜயன், ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது சாலை பணியாளர்களை, தொலைதூர பணிகளுக்கு தொடர்ந்து அனுப்புவதை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தில் இருந்து கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.