நாமக்கல்லில்ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் தீவிரம்90 ஆயிரம் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு


நாமக்கல்லில்ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் தீவிரம்90 ஆயிரம் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை 90 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை சாமிக்கு 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

1 லட்சத்து 8 வடைகள்

ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை சுமார் 90 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று (வியாழக்கிழமை) முடிக்கப்பட்டு, மாலை கோர்க்கும் பணி தொடங்கும் என வடை தயாரிப்பு பணியில் ஈடுபடும் நபர்கள் கூறினர்.

இதற்கிடையே ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இருந்து கோவில் வரை பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தடுப்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

ரூ.250 கட்டண தரிசனம்

ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்துள்ளோம். விரைவாக சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.250 கட்டணத்தில் தனிவழி மற்றும் இலவச தரிசனம் செய்யும் வழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும். எனவே அதன் பிறகு வரும் பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தை பார்வையிட அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இணையதளம் மூலமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

போக்குவரத்துக்கு தடை

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை கோட்டை சாலையில் வாகனங்கள் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதுதவிர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டிரோன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story