நாமக்கல் மாவட்டத்தில்5.43 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புஇன்று முதல் டோக்கன் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000, 1 முழு கரும்பும் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 403 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 673 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 76 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இன்று முதல் டோக்கன்
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் விகிதம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மற்றும் நேரம் தொடர்பான டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்படும். பின்னர் 9-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனில் தெரிவிக்கப்பட்டு உள்ள விவரங்களின்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.