இது நம்ம வார்டு-6மாயம்பிள்ளையார் கோவில் புதுப்பிக்கப்படுமா ?பக்தர்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல் நகராட்சி 6-வது வார்டில் உள்ள பழமைவாய்ந்த மாயம்பிள்ளை கோவில் புதுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
6-வது வார்டு
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டில் சேலம் ரோடு உபசந்துகள், பதிநகர், 80 அடி சாலை, சாமிதோப்பு, மாயம்பிள்ளையார் கோவில் தெரு, ரோஜா நகர், என்.ஜி.ஓ. காலனி, ராஜீவ்காந்தி நகர், பொன்நகர், என்.பி.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள பதிநகரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதர அரசு அலுவலகம் எதுவும் இல்லை.
இந்த வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார்டில் 1,057 ஆண்கள், 1,149 பெண்கள் என மொத்தம் 2,206 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த மோகன் வெற்றி பெற்றார்.
சாலை வசதி
இந்த வார்டில் இதர வார்டுகளை போன்று சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மேலோங்கி நிற்கிறது.
இந்த வார்டில் பழமைவாய்ந்த மாயம்பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இக்கோவிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாயம்பிள்ளையார் கோவில்
இதுகுறித்து மாயம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் கூறியதாவது :-
எங்கள் தெருவில் பிரசித்தி பெற்ற மாயம் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். தற்போது இந்த கோவில் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. இக்கோவில் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை சீரமைப்பு பணி எதுவும் செய்யவில்லை. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோவிலை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இதேபோல் மாயம்பிள்ளையார் கோவில் சாலை, அன்புநகரில் 3 தெருக்கள், சேலம் ரோடு 4-வது உபசந்து உள்ளிட்ட பகுதிகளில் சாலை பழுதான நிலையில் உள்ளது. அந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் ரோடு பகுதியை சேர்ந்த பேபி :-
நாங்கள் கியா மோட்டார் சந்து பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியிலும் பி.எம். ஆஸ்பத்திரி சந்து பகுதியிலும் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த 2 சந்து பகுதியும் இருள் அடைந்து காணப்படுகின்றன. எனவே ஏற்கனவே உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு பொருத்தி எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் துரத்தி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய் விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.பி.எஸ். நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இல்லை. அங்கு பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.