நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்றுவிடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கைதொழிலாளர் துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருநந்தன் ஆலோசனைப்படி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால், அவர்களுக்கு அன்று இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 நாட்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா? என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.
60 நிறுவனங்கள் மீது வழக்கு
இந்த ஆய்வின்போது 30 கடை நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 17 கடைகளிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் விதிமுறை மீறல் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 88 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பு ஒப்புதல் பெறாமல், பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.
எனவே விதிமுறை மீறல் கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்து உள்ளார்.