புதிய பஸ்நிலைய பணிகள் 70 சதவீதம் நிறைவு


புதிய பஸ்நிலைய பணிகள் 70 சதவீதம் நிறைவு
x

நாமக்கல் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

புதிய பஸ்நிலையம்

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டது ஆகும். இந்த நகராட்சி பகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் 27 பஸ் நிறுத்தங்களை கொண்ட பஸ் நிலையம் 3.77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க முதலைப்பட்டி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 12.90 ஏக்கர் நிலம் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டு, சுமார் ரூ.36 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

70 சதவீத பணிகள் நிறைவு

புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணியர் காத்திருப்பு பகுதி, 2 ஏ.டி.எம். மையம், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பணி தற்போது சுமார் 70 சதவீதம் முடிவடைந்து இருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் 3 மாத காலத்தில் முடிக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுவட்ட சாலையில் இருந்தே பஸ்நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதால், சுற்று வட்டசாலை பணியை தொடங்கி, பஸ்நிலையம் வரை முடித்தால் மட்டுமே புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story