ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பிறகு எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற உறுதி மொழியை கிராம மக்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் எடுத்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் கிராமப்புற மக்களிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நடத்தை மாற்றத்தை கொண்டுவர தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மே 1 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

இதன் குறிக்கோள், நிலையான பாதுகாப்பான சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவுகளை மூலப்பிரிப்பு, கழிவுகளை குறைத்தல் மற்றும் திட மற்றும் திரவகழிவுகளை கழிவு உருவாகும் இடத்திலேயே கழிவு மேலாண்மை செய்யும் நடைமுறைகளை மேம்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை ஆகும்.

மாவட்டத்தின் கழிவறை மறுசீரமைப்பு இலக்கை அடைதல், துப்புரவு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து தொழிலாளர்களுக்கும் (துப்புரவு பணியாளர்கள்) சுகாதாரம் மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவித்தல், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல், தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story