நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை


நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை
x

நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையில் நடந்தது. தாசில்தார் சாப்ஜான், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் முத்தகரம் பழனிசாமி, வயலூர் சதாசிவம், அட்மா ஆலோசனை குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், இயற்கை விவசாயி சிறுநாத்தூர் கிருஷ்ணன், நீலந்தாங்கல் பாரதியார், அரும்பாக்கம் முருகன், காட்டுமலையனூர் சுதாகர், சின்ன ஓலைப்பாடி திருவேங்கடம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தனி ஊராட்சி

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ''ஊராட்சிகளில் உள்ள புறம்போக்கு மற்றும் ஏரி புறம்போக்கு இடங்களில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகே வீடுகளை அகற்ற வேண்டும்.

காட்டுமலையனூர் வெள்ளக்குளம் பகுதியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும். சின்ன ஓலைப்பாடி பஞ்சாயத்து சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

செல்லங்குப்பம் சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு பசுந்தாள் உரங்களை கூடுதலாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். நந்தன் கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.

வந்தவாசி

வந்தவாசியில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் செய்யாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் நடந்தது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எஸ்.சுபாஷ்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.ஸ்ரீதர், வேளாண்மை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்து பேசினர். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோருக்கும், விவசாயிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமாரி விவசாயிகளுக்கு உறுதி அளித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.


Next Story