நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா மூடல்


நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா மூடல்
x
தினத்தந்தி 18 Sept 2023 1:15 AM IST (Updated: 18 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா மூடப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா மூடப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

நிபா வைரஸ் பரவல்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுவன் உள்பட 4 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையில் கேரள சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் சாலைகளில் தமிழக சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர்.

காய்ச்சல் பரிசோதனை

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில், கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட 11 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கடந்த 5 நாட்களாக முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரிக்கு மிகவும் குறைந்து உள்ளது. மேலும் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் மையம் பூங்கா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.

இருப்பினும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு சோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் யாருக்கும் இருப்பது கண்டறியப்படவில்லை. இருப்பினும் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.


Next Story