அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு


அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு
x

அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

ஆய்வு

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் அருகே சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 6 சிறுமிகள் கடந்த 6-ந்தேதி தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறிந்ததும் காஞ்சீபுரம் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வி. கிரண் சுருதி, வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அங்கு வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு வசதி, குழந்தைகள் தப்பி சென்றதற்கு உண்டான சூழல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிச்சைக்கார குழந்தைகள்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து நெல்லை, வேலூர், ஒரு சில மாவட்டங்களில் சிறார்கள் தப்பித்து செல்கிறார்கள், தப்பித்து செல்லும் சிறார்கள் மீட்கப்படுகிறார்கள் தொடர்ச்சியாக இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது, இதற்கு முற்றுப்புள்ளி என்ன, சம்பவம் ஏன் நடக்கிறது, குழந்தைகள் காப்பகத்தை பார்த்துவிட்டு என்ன பரிந்துரை செய்ய முடியும் என்பதை ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும் இதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

குழந்தைகள் பிச்சை எடுக்காத நிலையை உருவாக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா, போன்ற இடங்களில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை நாம் பார்த்திருப்போம் அதை எவ்வாறு தடுப்பது என்பதை ஒரு ஆண்டுக்கு முன்பே ஆணைய தலைவர், வழிகாட்டுதல்களை அனுப்பி சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டார். தமிழகத்தில் இன்று தான் காஞ்சீபுரத்தில் இருந்து இதை ஆரம்பிக்கிறோம். தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறிப்பாக பிரதமரின் கனவான பிச்சைக்கார குழந்தைகள் இல்லா இந்தியா மாதிரியான திட்டம்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் என்பது ஒரு கடுமையான குற்றம். அது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கம்பெனியின் உரிமையை கூட ரத்து செய்யக்கூடிய அளவுக்கு கூட சட்டத்தில் இடம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story