மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்


மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 22 July 2023 11:15 PM GMT (Updated: 22 July 2023 11:15 PM GMT)

அரசியலாக பார்க்காமல் மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

தேசிய கல்வி கொள்கை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்றால் பல ஆண்டுகளாக கொள்கை புதுப்பிக்கப்படாமல் இருந்தது. வேலை வாய்ப்பை தரக்கூடிய வகுப்பறை சார்ந்த கல்வியாக இருந்தது. ஆனால் பிரதமர், வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு கல்வியை எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும், 60 சதவீதத்துக்கு மேல் இளைஞர்கள் உள்ள நாடு என்பதால் கல்வி புரட்சியை ஏற்படுத்தவும்தான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.

அரசியலை புகுத்த கூடாது

தமிழகம் உள்பட மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதில் அரசியலை புகுத்த கூடாது. பல மாநிலங்களில் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தேசிய கல்வி கொள்கையில் நிறைய நல்ல அம்சங்கள் உள்ளன.காலையில் உணவு தரப்படும் திட்டம் புதிய கல்வி கொள்கையிலும் உள்ளது. லட்சக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கருத்துகளை கேட்டு உருவாக்கப்பட்டதுதான் தேசிய கல்வி கொள்கை. அதில் தாய் மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது.

மாணவர்கள் நலனை மேம்படுத்த...

தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பேர் தமிழ் மொழியில் தோல்வியடைந்து உள்ளதை எப்படி ஏற்க முடியும். தமிழ் பேசும் மாநிலத்தில் தமிழ் பாடத்தில் பொது தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

புதுச்சேரியில் சில நடைமுறைப்படுத்தப்பட்டு எல்லா பள்ளிகளும் சி.பி.எஸ்.இ.யாக மாற்றப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. புதிய கல்வி கொள்கையும் பின்பற்றப்படுகிறது. உலக அரங்கில் மாணவர்கள் நலனை மேம்படுத்தி அழைத்துச் செல்ல அரசியல் இல்லாமல் தேசிய கல்வி கொள்கையை ஏற்று அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் நல்ல தரமான கல்வி தரப்படுகிறது. அந்த கல்வியை மேம்படுத்தலாம். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. உலகம் விரிவடைந்து விட்டது. வாய்ப்புகள், சவால்கள் அதிகமாக உள்ளது. உலகம் வளரும் போது நாமும் மேம்படுத்தி கொண்டால் நல்லது என்று நினைக்க வேண்டும். அடிப்படையில் கல்வியில் தமிழகம் சிறந்து உள்ளது என்றால் அதற்கு காமராஜர்தான் காரணம். சாமானியர்களும் படிக்க காரணம் காமராஜர்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story