கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?


கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
x

கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் பணிகளை விரைவுப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி

தேசிய நெடுஞ்சாலை

கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் செல்கின்றன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலத்திற்கும், வட மாநிலங்களுக்கும் செல்ல கூடிய வாகனங்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்கின்றன.

அதேபோல கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை, சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இதில் கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் முதல் அவதானப்பட்டி மேம்பாலம் வரையில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வாகன ஓட்டிகள் சிரமம்

இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் அதை குறைப்பதற்காக இந்த சாலை அமைக்கப்பட்டன. இதற்காக தேசிய நெடுஞ்சாலையின் 2 புறமும் சாலை விரிவாக்கத்திற்காக குழி தோண்டப்பட்டன. இதனால் மோட்டூர், அக்ரஹாரம், அவதானப்பட்டி செல்லும் மக்கள் சுற்றி செல்ல கூடிய நிலை உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் அதிக அளவில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் உள்ளன.

இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டவே மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். பின்னால் வேகமாக வரும் வாகனங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சாலையோர பள்ளத்தில் இறங்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் சாலையில் நீண்ட நாட்களாக குழி தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெறாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கருத்து

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

செல்போன் கடை உரிமையாளர்ஷாஜகான்:- நான் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மிகவும் பயந்தபடியே செல்லும் நிலை உள்ளது. சாலையோரம் பெரிய அளவில் குழி தோண்டப்பட்டிருப்பதாலும், பின்னால் வரும் வாகனங்கள் அசுர வேகத்தில் அருகில் வந்து ஹாரன் அடித்து செல்வதாலும் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பணிகளை துரிதப்படுத்தி சர்வீஸ் சாலை பணிகளை முடித்திட வேண்டும்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன்:- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் பெரிய அளவில் குழியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story