தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 July 2023 12:55 AM IST (Updated: 17 July 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் நிலவரங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் மூலம் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் சென்னை - பெங்களூரு விரைவுசாலை அமைக்கும் பணிகளுக்கு ஏரிகளிலிருந்து மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இப்பணிகளின் போது சாலையோரம் அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக ஒரு மரத்திற்கு தலா 10 மரக்கன்றுகள் வீதம் நடுவதற்கு விதிமுறைகளின் படி பணிகள் தொடங்கப்படவில்லை. பணிகள் முடிவுற்ற பின் சாலையோரங்களில் அதற்கான பணிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

அதேபோன்று சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை வழித்தட நெடுஞ்சாலைப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது மற்றும் நில மாற்றங்கள் குறித்து கேட்டறிந்து இவைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய நெடுஞ்சாலை, காரை பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாலம் அமைக்கும் பணிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையினை விரைவாக முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை பணிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு கனிம வளத்துறையின் மூலம் மண் எடுப்பதற்காக கோரப்பட்டுள்ள பகுதிகளில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆய்வு செய்து மழைக்காலத்திற்கு முன்னதாக இப்பணிகளுக்கு தேவையான அனுமதியினை உடனடியாக வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகனை விரைவாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே இப்பணிகளில் காலதாமதம் ஏற்படுத்தாமல் துறை சார்ந்த அலுவலர்கள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனுமதி வழங்குவதில் உள்ள நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் செல்வகுமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி இயக்குனர் (கனிம வளம்) பெர்னாட், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சற்குணம் மற்றும் அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story