கொட்டப்பட்டு குளத்தை ஆக்கிரமிப்பு
கொட்டப்பட்டு குளத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கொட்டப்பட்டு குளம்
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொட்டப்பட்டு குளம் உள்ளது. இந்த குளத்து நீரை பயன்படுத்தி பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. கொட்டப்பட்டு கிராம மக்கள்தான் இந்த குளத்து நீரை அதிக அளவில் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வந்தனர்.
மேலும் இங்கிருந்து மாவடிகுளம், காளியம்மன் கோவில் அருகே உள்ள குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல வாய்க்கால்களும் இருந்தன. இதற்காக குளத்தின் கரையில் 2 இடங்களில் மதகுகளும் இருந்தன. காலப்போக்கில் சாகுபடி பரப்பு நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறியதால் விவசாயம் நிறுத்தப்பட்டது.
வாய்க்கால்கள் மாயம்
மழைக்காலத்தில் குளம் நிரம்பினால் வெளியேறும் தண்ணீர் கொட்டப்பட்டு கிராமத்தின் வழியாக மாவடிகுளத்தில் சென்றடைவது வழக்கம். தற்போது கோல்டன்நகர், வெங்கடேஸ்வராநகர், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் வீட்டுமனைகள் வந்துவிட்டதால், இந்த குளத்தில் இருந்து மாவடிகுளத்துக்கு செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டது. இதனால் கடந்த மழைக்காலத்தின் போது கூட தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கொட்டப்பட்டு குளத்திற்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வாய்க்கால் மூலமாக தண்ணீர் வருவது உண்டு. ஆனால் பாசனம் நிறுத்தப்பட்டவுடன் அந்த வாய்க்காலும் அடைக்கப்பட்டு விட்டது. தற்போது கே.கே. நகர், செம்பட்டு, விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் மூலம் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
சாலை விரிவாக்கம்
இது ஒருபுறம் இருக்க திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், தற்போது மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக கொட்டப்பட்டு குளத்தின் கரையை அகற்றி, சுமார் 500 அடி நீளம் 50 அடி அகலத்தில் இருந்த கரையை உடைத்து மண் அனைத்தும் குளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. மேலும், குளத்தின் கரையில் இருந்த மதகுகளும் மாயமாகி உள்ளன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குளத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதை அந்த வழியாக செல்லும் சமூக ஆர்வலர்கள் பார்த்து மன வேதனை அடைந்துள்ளனர். நீர்நிலைகளை எக்காரணம் கொண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆனால் இங்கு தேசிய நெடுஞ்சாலை துறையினரால் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியுமா? என தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் கொட்டப்பட்டு குளம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நாளடைவில் காணாமலேயே போய்விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே குளம் ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தி குளத்தின் உண்மையான பரப்பளவு, ஏற்கனவே இருந்த எல்லை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.