8,283 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை


8,283 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
x
தினத்தந்தி 22 Aug 2023 9:15 PM GMT (Updated: 22 Aug 2023 9:15 PM GMT)

நீலகிரியில் 8,283 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் 8,283 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

சிறப்பு முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்த நாளையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. முகாமை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளி நலத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தங்களை தாங்களே பராமரித்து கொள்ள இயலாதவர்களுக்கு உயர் ஆதரவு தேவைப்படுவோருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பல்வேறு கடனுதவிகள், பெரிய தொழில் தொடங்க மத்திய, மாநில அரசு மூலம் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 15,911 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை 8,283 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து 5 பேருக்கு ரூ.3.94 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 பேருக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பில் திறன் பேசிகள் உள்பட மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.6.31 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் (பொறுப்பு) ஜெகதீசன், வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் அமீது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி, தாசில்தார் சரவணக்குமார், தொழில் மையம் புள்ளியல் ஆய்வாளர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story