வனத்துறை சார்பில் இயற்கை நடை பயணம்
வேலூர் அருகே வனத்துறை சார்பில் இயற்கை நடை பயணம் நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வனவிலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் வனக்கோட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் வனவிலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூரை அடுத்த வசூர் தீர்த்தகிரி முருகன் கோவில் அருகே இயற்கை நடைபயணம் நடைபெற்றது. வனவர்கள் சுதாகர், கார்த்திகேயன், வனபாதுகாவலர் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமை தாங்கி இயற்கை நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
தீர்த்தகிரி முருகன் கோவில் அருகே இருந்து தொடங்கிய நடைபயணம் செங்காநத்தம் மலைப்பாதை வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் தீர்த்தகிரி முருகன் கோவில் அருகே நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 110 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபயணத்தில் பங்கேற்றவர்களுக்கு வனவிலங்குகளின் முக்கியத்துவம், காடுகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மலையின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.