மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா


மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
x

நாமக்கல் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

நாமக்கல்

நவராத்திரி விழா

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் உள்ள சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில் 12-ம் ஆண்டாக நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இவ்விழா வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 9 கொலு படிகளில் பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நவராத்திரியின் 9 நாட்களிலும் மகா மாரியம்மன் சாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று சேலம் கோட்டை மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) விஜயவாடா கனக துர்காம்பிகை அம்மன் அலங்காரத்திலும், 3-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) வராகி அம்மன் அலங்காரத்திலும், 4-ம் நாளில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்காரத்திலும், 5-ம் நாளில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரத்திலும், 6-ம் நாளில் திருகருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன் அலங்காரத்திலும், 7-ம் நாளில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் அலங்காரத்திலும், 8-ம் நாளில் சுயம்பு மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும், 9-ம் நாளில் வித்யா சரஸ்வதி அம்மன் அலங்காரத்திலும் மகா மாரியம்மன் காட்சி அளிக்க உள்ளார்.

நவராத்திரி நாட்களில் தினந்தோறும் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சிறுவர், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23-ந் தேதி நவராத்திரி சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்து உள்ளனர்.

புது மாரியம்மன் கோவில்

பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் 49-ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தினமும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 24-ந் தேதி மாலை புது மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பேட்டை பகவதியம்மன் கோவிலை சென்றடைகிறது. பின்னர் அங்கு அம்பு சேர்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோவில் நற்பணி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story