நாகை மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா
நாகை மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரத்தினகிரீஸ்வரர் கோவில்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் ஆமோதள நாயகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
அதேபோல் மருங்கூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சவுந்தர நாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்காரவேலவர் கோவில்
புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வேல்நெடுங்கண்ணி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று கோவிலில் இருந்து சிங்காரவேலவர், கோலவாமன பெருமாள் புறப்பட்டு தேரடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.