நவராத்திரி விழா மேல்மருவத்தூர் கோவிலில் அகண்ட தீபம் - பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்


நவராத்திரி விழா மேல்மருவத்தூர் கோவிலில் அகண்ட தீபம் - பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்
x

நவராத்திரி விழாவையொட்டி மேல்மருவத்தூர் கோவிலில் அகண்ட தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதேபோன்று இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று மிகவும் விமரிசையாக தொடங்கியது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

பின்னர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாரதனை காட்டி கருவறையில் வைக்கப்பட்டிருந்த நவராத்திரி அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். ஏற்றிவைக்கப்பட்ட அகண்ட தீபத்தை தெய்வங்கள் வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் ஆகியோர் அகண்ட தீபத்துடன் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் வைத்தனர்.

இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மகாளய அமாவாசை தினமான நேற்று வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் ஆன்மிக குரு அடிகளார் பொது வேள்வியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நவராத்திரி விழாவானது வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் காப்புகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெறும். மேலும் லட்சார்ச்சனையும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரமேஷ், தலைமைச் செயல் அதிகாரி வக்கீல் அகத்தியன், ஆதிபராசக்தி கல்விக்குழும இயக்குனர்கள் ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story