ஆண்டிப்பட்டி அருகேகுடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்:நோய் பரவும் அபாயம்


ஆண்டிப்பட்டி அருகேகுடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்:நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தேனி

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு, அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பல இடங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை.

மழைநீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்காலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் மூடப்பட்டது. இதனால் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த தொடர்மழையால் அய்யனார்புரம் பகுதியில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. மழை நீர் அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.

தொற்றுநோய்

இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து சென்று வரும் அவல நிலை உள்ளது. தேங்கியுள்ள மழை நீரால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறினர். இதனையடுத்து நிர்வாகம் சார்பில் பணியாளா்கள் வந்து எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு அய்யனார்புரம் பகுதியில் வடிகால் வசதிகள் செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story