ஆண்டிப்பட்டி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டர் டயர் வெடித்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை கண் முன் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
டிராக்டர் டயர் வெடித்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி குமாரபுரம் பகுதியை சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் மாணிக்கம் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ஆண்டிப்பட்டி அருகே மொட்டனூத்தில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இன்று அந்த தோட்டத்திற்கு சமுத்திரபாண்டி, மாணிக்கம் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை மாணிக்கம் ஓட்டினார்.
ஆண்டிப்பட்டியை அடுத்த குப்பாம்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிரே வந்த மாணிக்கம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சமுத்திரபாண்டி தூக்கி வீசப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியர் பலி
மேலும் கீழே விழுந்த மாணிக்கத்தின் தலையில் டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தந்தையின் கண் முன்னே மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சமுத்திரபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணிக்கத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிராக்டர் டயர் வெடித்து மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர், தந்தை கண் முன் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.