ஆசனூர் அருகே நடுரோட்டில் லாரியை வழிமறித்து குட்டியுடன் கரும்பை சுவைத்த யானை


ஆசனூர் அருகே  நடுரோட்டில் லாரியை வழிமறித்து  குட்டியுடன் கரும்பை சுவைத்த யானை
x

கரும்பை சுவைத்த யானை

ஈரோடு

ஆசனூர் அருகே நடுரோட்டில் லாரியை வழிமறித்து குட்டியுடன் யானை கரும்பை சுவைத்தது.

யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

லாரியை மறித்தன

இந்தநிலையில் நேற்று மாலை தமிழக-கர்நாடக எல்லையான ஆசனூைர அடுத்த காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டியுடன் யானை சுற்றித்திரிந்தது. அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

லாரி வருவதை பார்த்ததும் யானை அதை நோக்கி ஓடியது. நடுரோட்டில் லாரியை வழிமறித்தபடி நின்றது. குட்டியும் வேகமாக ஓடி வந்து தாய் யானையின் அருகில் நின்றது.

கரும்புகளை சுவைத்து..

குட்டியுடன் யானை நிற்பதை பார்த்ததும் டிரைவர் நடுரோட்டில் லாரியை நிறுத்தினார். பின்னர் யானை லாரியில் இருந்த கரும்புகள் ஒவ்வொன்றையும் துதிக்கையால் உருவி ருசித்து தின்ன தொடங்கியது. சில கரும்புகளை துதிக்கையால் இழுத்து கீழே போட்டது. கீழே விழுந்த கரும்புகளை குட்டி யானை தின்றது.

இதனால் அந்த வழியாக மற்ற எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

யானையை பார்த்ததும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். தொடர்ந்து குட்டியுடன் நின்ற படி யானை லாரியில் இருந்த கரும்புகளை தின்று ெகாண்டு இருந்தது. இதனால் டிரைவர் லாரி மீது ஏறி கரும்புகளை எடுத்து சாலையோரத்தில் வீசினார். உடனே தாய் யானையும், குட்டியும் லாரியை விட்டு விட்டு ரோட்டோரம் வீசப்பட்ட கரும்புகளை தின்றது.

இதைத்தொடர்ந்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின்னரே மற்ற வாகனங்கள் சென்றன. குட்டியுடன் யானை லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்ததால் காரப்பள்ளம்-புளிஞ்சூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story