குன்னூர் அருகே குட்டியுடன் காட்டுயானைகள் முகாம்;வனத்துறையினர் எச்சரிக்கை
குன்னூர் அருகே குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர பகுதிகளில் அதிகளவு பலாப்பழ மரங்கள் உள்ளன. தற்போது சீசன் நிலவி வருவதால் பலாமரத்தில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை ருசிக்க சமவெளி பகுதியிலிகுந்து யானைகள் வருகின்றன. இதனால் கடந்த சில மாதங்களாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரெயில் தண்டவாள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
அவ்வப்போது யானைகள் சாலையையும். ரெயில் தண்டவாளத்தையும் கடந்து வருகின்றன. வனத்துறையினர் கண்காணித்து யானைகளை விரட்டி வந்தாலும் மீண்டும் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் கிராம பகுதியில் குட்டி உள்பட 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த பகுதிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் டேன்டீ ஆகியவற்றிற்கு சொந்தமான இடங்களில் புதர்கள் அதிகம் உள்ளன. இந்த இடங்களில் தற்போது யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் மக்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.