கயத்தாறு அருகே, ஆம்னி பஸ்சில்தனியார் பள்ளி நிர்வாகியிடம்ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை


கயத்தாறு அருகே, ஆம்னி பஸ்சில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை நடந்துள்ளது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே, ஆம்னி பஸ்சில் சென்ற தனியார் பள்ளி நிர்வாகி டீ குடிக்க இறங்கியபோது, பஸ்சில் அவர் பையில் இருந்த ரூ.10 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தனியார் பள்ளி நிர்வாகி

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ரூபன் (வயது 42). இவர் மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். ேமலும் சென்னையில் கியாஸ் நிறுவன வினியோகஸ்தராகவும் உள்ளார்.

ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார். அதை மீட்பதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பணத்தை ஒரு பையில் போட்டு அதை பஸ்சில் பயணிகள் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் வைத்திருந்தார்.

துணிகர கொள்ளை

அந்த ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன் நின்றது. அதில் இருந்த பயணிகள் இறங்கி டீ உள்ளிட்டவை சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.அதேபோல் ரூபனும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலில் டீ சாப்பிட்டார். அப்போது பணம் இருந்த பைைய பஸ்சிலேயே வைத்து விட்டு வந்திருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் மீண்டும் வந்து பஸ்சில் ஏறினார். அப்போது அவர் பையில் வைத்திருந்த பணத்தை காணாது திடுக்கிட்டார். மர்ம நபர் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து கயத்தாறு போலீசில் ரூபன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பஸ்சில் துணிகரமான முறையில் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்கள் வழியில் பயணிகள் வசதிக்காக ஓட்டல் முன் நிறுத்தப்பட்டு, பயணிகள் சாப்பிட வழிவகை செய்வது உண்டு. அதேபோல் தான் நேற்று முன்தினமும் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மர்ம நபர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story