கயத்தாறு அருகே அண்ணன், தம்பி மீது தாக்குதல்
கயத்தாறு அருகே அண்ணன், தம்பி மீது தாக்குதல் நடத்திய எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி முத்து மகன்கள் கேப்ரியல், சேசு, தேவ ஆசீர்வாதம், கனகராஜ், சார்லஸ், மற்றும் ஜான்பவுல். இவர்கள் ஐந்து பேரும், இவர்களது அக்காள் தங்கை மூன்று பேரும் தனது தகப்பனாரின் சொத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு கடைசி தம்பி ஜான் பவுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 8 பேரும் கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் வசித்து வரும் ஜான்புவுலின் மைத்துனர்களான தேவசகாயம்பவுன்ராஜ், ஜெயபாலன் ஆகியோர் வீட்டுக்கு சென்றுள்ளனர். சொத்தை விற்பதற்கு ஜான்புவுலை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று அவர்களிடம் எட்டு பேரும் வலியுறுத்தியுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தேவசகாயம் பவுன்ராஜ், ஜெயபாலன் ஆகியோரை அவர்கள் கம்பு, செங்கற்களால் தாக்கினராம். இதில் காயமடைந்த அந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கேப்ரியல் உள்ளிட்ட 8 பேர் மீது கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.