கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு
கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கரண்ராஜ் (வயது 22). இவர் கடந்த 12-ந்தேதி தனது நண்பர்களுடன், கச்சிராயப்பாளையம் அடுத்த சோமண்டார்குடி ஆற்றில் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஆற்றில் இறங்கி மீன்பிடித்து கொண்டிருந்தபோது, வெள்ளத்தில் கரண்ராஜ் அடித்து செல்லப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கரண்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் கரண்ராஜ், மோ.வன்னஞ்சூர் ஆற்றுப்பகுதியில் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று, கரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.