குப்பம்மாசத்திரம் அருகே - மோட்டார் சைக்கிளில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து பலி
மோட்டார் சைக்கிளில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து பலியானார்.
சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரை சேர்ந்தவர் வெங்கட்டநாராயணன் (வயது 69). கடந்த 14-ந்தேதியன்று வெங்கட்ட நாராயணனின் உறவினர் திருவாலங்காடு அருகே காலமானார். அதில் கலந்து கொள்வதற்காக வெங்கட்டநாராயணன் தன் மகன் ஆனந்தகுமார் (19) என்பவருடன் சென்றார். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மோட்டார் சைக்கிள் திருத்தணி- திருவள்ளூர் நெடுஞ்சாலையான குப்பம்மாசத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து இருந்த வெங்கட்ட நாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனந்தகுமாருக்கு காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்த வெங்கட்ட நாராயணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.